டெல்லி விவசாயிகளுடன் நடக்க இருந்த ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை.
அதுமட்டுமன்றி மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இருந்தாலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து நேற்று நாடு முழுவதும் பாரத் பந்த் போராட்டம் நடந்தது. அதில் லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் 14வது நாளாக வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தை கைவிட கோரி மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனை அடுத்து ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும் குறைந்த பட்ச ஆதார விலை தொடரும் என எழுத்துப்பூர்வ உறுதியை மத்திய அரசு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.