கோவையில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக எம்பி கனிமொழி அதிமுகவின் ஸ்மார்ட்சிட்டி திட்டம் குறித்து விமர்சித்துள்ளார்
திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி கோவை மாவட்டத்தில் இருக்கும் வெள்ளலூர் பகுதிகள் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் “2019 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி அமைச்சர் வேலுமணி ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தின்கீழ் குப்பைகளை பிரித்து எடுத்து மக்க செய்வதற்கான வழி செய்வேன் என 60 கோடி மதிப்பில் திட்டம் ஒன்றை அறிவித்தார்.
திட்டம் அறிவிக்கப்பட்டது ஆனால் 60 கோடி ரூபாய் என்ன ஆனது என்பது யாருக்கும் தெரிய வரவில்லை. குப்பைகள் அதே இடத்தில் இருக்கிறதே தவிர மக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் அடிக்கடி குப்பை கிடங்கில் தீ பற்றிக்கொண்டு மூன்று முதல் நான்கு நாட்கள் வரை தொடர்ந்து தீ எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் சுற்றி வீடுகளில் வசிக்கும் மக்கள் புகை மூட்டத்தால் சுவாசிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்த ஆட்சியில் மூச்சுக்கூட விடமுடியாமல் மக்களின் வாழ்க்கை இருக்கிறது.
குப்பையில் இருந்து வரும் துர்நாற்றமும் தீப்பற்றிக் கொண்டால் அதிலிருந்து வெளியேறும் புகையும் தொடர்கிறது. அதுமட்டுமில்லாமல் 69 இடங்களில் மறுசுழற்சி முறையில் குப்பைகள் சரிசெய்யப்பட்டு கொண்டுவந்து கொட்டப்படும் என்றார்கள். 12 இடத்தில் வேலைகள் முடிவடைந்ததாக கூறினார்கள். ஆனால் எந்த இடத்தில் இருந்தும் மறுசுழற்சி முறையை பின்பற்றுவதற்கு முயற்சிகள் எடுத்ததாக தெரியவரவில்லை. இப்படி ஒவ்வொரு பணியிலும் ஒவ்வொரு வார்த்தைகளும் மக்களை ஏமாற்றுவதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கும் ஆட்சிதான் இந்த ஆட்சி” என கூறியுள்ளார்.