தமிழக முதலமைச்சருக்கு, தி.மு.கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, எம்.பி., நேற்று (9.12.2020), செய்தியாளர் சந்திப்பின் மூலம் வெளியிட்ட திறந்த மடல். அதில்,
“திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும் தலைவர் கலைஞர் மீதும் – மத்திய அமைச்சராக பணியாற்றி 2ஜி வழக்கை எதிர்கொண்டு வெற்றி பெற்ற என்மீதும் கடந்த 03.12.2020 அன்று தொலைக்காட்சியில் தாங்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறும் விதமாக அதே தேதியில் நானும் ஊடகங்களை சந்தித்து யார் ஊழல்வாதி, எந்தக் கட்சி ஊழல் கட்சி என்பதை பகிரங்கமாகவும் பட்டவர்த்தனமாகவும் ஆதாரத்தோடு குறிப்பிட்டு தி.மு.கழகத்தின் மீது தாங்கள் தெரிவித்த வீராணம், சர்க்காரியா, 2ஜி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எவையும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லையென்றும்,
ஆனால் உங்களால் ‘அம்மா’ என்று சுயநலக் காரியங்களுக்காக அழைக்கப்படும் ஜெயலலிதா மீது ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு சிறை சென்றவர் என்றும், அவர் சிறை செல்ல காரணமாக இருந்த கீழமை நீதிபதி மாண்புமிகு நீதியரசர் குன்ஹா அவர்களின், தீர்ப்பு உச்சநீதிமன்றத்தால் அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதென்றும், எனவே ‘அம்மா’ வழியில் தங்கள் ஆட்சி நடைபெறுவதாக கூறுவது ஊழல் செய்ய அனுமதியும் – அங்கீகாரமும் கேட்கும் வெட்கமற்ற செயல் என்றும் கூறியதோடு, இதுகுறித்து விவாதித்து உண்மையை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த என்னை கோட்டைக்கு அழையுங்கள் என்று வேண்டியதோடு, அப்போது உங்கள் அமைச்சரவையையும் – உங்களின் எஜமான மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலையும் – மாநில அட்வகேட் ஜெனரலையும் அழையுங்கள் என்று பகிரங்க சவால் விட்டிருந்தேன்.
நாட்கள் பலவாகியும் தங்களுக்கு ஏனோ அந்த திராணியும் – தெம்பும் இல்லை என்பதை நடுநிலையாளர்கள் உணர்ந்துள்ளார்கள். ஏனெனில் உங்கள் தலைவியின் மீது உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் அடர்த்தி அத்தகையது. தீர்ப்பின் அடர்த்தி தெரிந்து நீங்கள் தொடர்ந்து அமைதி காத்திருந்தால் உங்கள் அரசியல் பண்பு சற்றே உயர்ந்திருக்கக் கூடும். என்னுடைய நேர்காணலில், நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் நான் பொறுப்பேற்கும் அதே வேளையில், அவை பொய்யென்று நிரூபிக்க நீங்கள் எடுத்த பொய்க்கால் குதிரை முயற்சிகள் பலன் தராது என்பதை உங்களுக்கு உணர்த்தி, உங்களை நாகரீகமான ஆரோக்கியமான அரசியலுக்கு நெறிப்படுத்தவே இக்கடிதத்தை நான் எழுதுகிறேன் என ஆதாரத்துடன் தெரிவித்தது தமிழக அரசியலை அதிர வைத்துள்ளது.