நேற்று செய்தியாளர்களை சந்தித்த திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, 2ஜி வழக்கு குறித்து முதல்வருக்கு மடல் ஒன்றை எழுதியுள்ளார். அதில், வீராணம் பற்றிய புகார் குறித்தோ – சர்க்காரியா கமிஷன் குறித்தோ – 2ஜி வழக்கு குறித்தோ தங்களால் ஏதும் ஆதாரத்தோடு பேச முடியாது என்று தெரிந்திருந்தும் உங்கள் ஊழலை மறைக்க அவ்வப்போது நீங்களும் உங்கள் சகாக்களும் விடும் ‘உதாரு’க்கும் உளறலுக்கும் எப்போதும் நீங்கள் வெட்கப்பட்டதில்லை. “விஞ்ஞான ரீதியாக நடைபெற்ற ஊழல்” என்று எந்த இடத்திலும் சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் இல்லையென்று உங்களுக்கும் உங்கள் சகாக்களுக்கும் நன்றாகவே தெரியும்.
2ஜி வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு (choreographed charge sheet) என்று நீதியரசர் ஓ.பி.சைனி கூறியதையும் உங்கள் சட்ட அறிஞர்கள் உங்களுக்கு சொல்லாமல் இருந்திருக்க மாட்டார்கள். நீங்கள் என் சவாலை ஏற்காவிடினும், நாட்டு மக்களுக்கு உண்மையை தெளிவுபடுத்த உங்கள் அம்மா மீதான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஆழமான கருத்துகளை, உங்களுக்கு கவனப்படுத்துகிறேன். பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலிருந்து இன்று வரை ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணையை எதிர்கொண்ட எந்த அரசியல்வாதியும், உங்கள் அம்மாவைப் போல் நீதிமன்ற தாக்குதலுக்கு ஆளானதில்லை என்பதை பின்வரும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் பகுதியிலிருந்து திறந்த மனநிலையில் உள்ள – சாதாரண அறிவுள்ள எவரும் அறியலாம். நீங்களும் அறிய வேண்டும் என விரும்புகிறேன்.
முதல் குற்றவாளி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, இரண்டாம் குற்றவாளியான சசிகலா, மூன்றாம் குற்றவாளியான சுதாகரன், நான்காம் குற்றவாளியான இளவரசி ஆகியோர் மீது தொடுக்கப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டில் உச்சநீதிமன்ற நீதியரசர்கள் பினாக்கி சந்திரகோஸ் மற்றும் அமித்தவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பின் முடிவுரை பகுதிகள் சிலவற்றை பட்டியிலிடுகிறேன் என ராசா அடுக்கி கொண்டே சென்றார்.