விவசாயிகளுக்கு எதிராக உள்ள வேளாண் சட்டத்தை ஒருபோதும் திரும்பப் பெற முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை.
அதுமட்டுமன்றி மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இருந்தாலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து நேற்று முன்தினம் நாடு முழுவதும் பாரத் பந்த் போராட்டம் நடந்தது. அதில் லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் குறைந்த பட்ச ஆதார விலை மற்றும் மண்டி அமைப்புகள் எந்த பாதிப்புமின்றி பழையபடி தொடரும் என்பது உள்ளிட்ட வேளாண் சட்ட திருத்தங்களை ஏற்படுத்துவதாக விவசாயிகளிடம் எழுத்துப்பூர்வ அறிக்கையை மத்திய அரசு வழங்கியுள்ளது. இன்று 15வது நாளாக விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்தாலும் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.