ரத்தம் கொடுபவர்களுக்கு ஒரு கிலோ சிக்கன் மற்றும் பன்னீர் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, “நீங்கள் எங்களுக்கு ரத்தம் தாருங்கள். நாங்கள் உங்களுக்கு ஒரு கிலோ பன்னீர் அல்லது கோழிக்கறி கொடுக்கிறோம்” என்று ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி காண்போருக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்டர் ரத்தத்தானத்தை ஊக்கப்படுத்துவதற்காக, ஒரு கார்ப்பரேட்டரும், சிவசேனா உறுப்பினருமான சமாதன் சதா சர்வங்கர் என்பவர் செய்த ஏற்பாடு ஆகும். மும்பை நகரம் முழுவதும் உள்ள ரத்த வங்கிகள் பொதுவாகவே, எல்லா ரத்த வகைகளிலும் குறைவாக இயங்குவதாகவும் குறைவான மக்களே இரத்த தானம் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
ஆனால் இந்த கொரோனா பாதிப்பிற்கு முந்தைய ஒவ்வொரு தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ரத்த தானம் செய்து வந்த நிலையில், இப்போது அந்த எண்ணிக்கை சுமார் ஒரு டஜன் வரை குறைந்துள்ளது. ஏனெனில் கொரோனா வைரஸ் பாதிப்பு கூடும் என்ற பயத்தால் ரத்த தானம் செய்வதில் இருந்து ஒதுங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மிகவும் பொதுவான ரத்த வகையான O+மற்றும் B+ வகையான ரத்தங்கள் குறைவாக இருப்பதால், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அல்லது விபத்தில் சிக்கியவர்கள், அவசர காலத் தேவைகளுக்கு போன்ற வழக்கமான ரத்தமாற்றதிற்கு தேவைப்படும் நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்.
இது குறித்து பேசிய சமாதன் சதா கூறுகையில், “நம் நகரத்திலுள்ள நோயாளிகளுக்கு அதிகளவில் ரத்தம் தேவைப்படுகிறது. எனவே மக்களை தானம் செய்ய தூண்டுவதற்காக ஒரு முயற்சி என்றும், என்னுடைய இந்த பிரசாரத்தின் மூலமாக மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற உதவும்” என்று நம்புவதாக கூறியுள்ளார். மேலும் டிசம்பர்- 13ம் தேதி காலை 10 மணி முதல் மும்பையின் புதிய பிரபாதேவி சாலையில் உள்ள ராஜ்பாவ் சால்வி மைதானத்தில் இரத்த தான முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.