சென்னை எழும்பூர் கோர்ட்டில் நடைபெற்றுவரும் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவால் இன்றைய விசாரணையில் ஆஜராக முடியவில்லை .
ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டிலிருந்து உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகிய இருவர் மீது 1996-ம் ஆண்டு அந்நிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருவதால், குற்றம் சுமத்தப்பட்ட சசிகலா, பாஸ்கரன் ஆகியோரிடம் குற்றச்சாட்டு பதிவு செய்ய எழும்பூர் கோர்ட்டு முடிவு செய்து இருவரையும் நேரில் ஆஜராகும்படி கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆனால், மற்றொரு வழக்கான சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, உடல் நலம் சரியில்லாத காரணமாக நேரில் ஆஜராக முடியாமல் போனது. அன்னிய செலாவணி மோசடி வழக்கில், நீதிபதிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க சசிகலாவை (இன்று) மே மாதம் 13-ம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என பெங்களூரு சிறைத்துறைக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் கடந்த 2ம் தேதி உத்தரவிட்டது. பின்னர் அவரின் பாதுகாப்பு கருதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து காணொலி மூலம் ஆஜர்படுத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாஸ்கரன் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி முன்பு ஆஜரானார். ஆனால், சசிகலா உடல் நலம் காரணமாக ஆஜராகவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நகல் கிடைப்பதற்கு தாமதமானதால் கணொலி காட்சிக்கு ஏற்பாடு செய்ய முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து இவ்வழக்கு விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு நீதிபதி மலர்மதி ஒத்திவைத்துள்ளார்.