நடிகர் விஷாலின் திருமணம் ரத்து செய்யப்பட்டு அவருக்கு நிச்சயக்கப்பட்ட பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் பரவுகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் ,நடிகர் சங்க செயலாளராகவும் பதவி வகிக்கிறார். இவருக்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த அனிஷா ரெட்டிக்கும் கடந்த மார்ச் மாதம் நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். ஏற்கனவே நடிகர் விஷால் தனது திருமணத்தை நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தில் தான் நடத்துவேன் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து திடீரென இவர்கள் திருமணம் ரத்தாகி விட்டதாக செய்திகள் பரவியது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஷால் தரப்பிலோ , அனிஷாரெட்டி தரப்பிலோ யாரும் தெரிவிக்கவில்லை .
இந்நிலையில் விஷாலுக்கு நிச்சயக்கப்பட்ட அனிஷா ரெட்டிக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அனிஷா தனது சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து நிச்சயதார்த்தத்தின் போது விஷாலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நீக்கியுள்ளார். இது குறித்து விஷாலுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்த போது திருமணம் ரத்து செய்யப்பட்டது உண்மைதான் என்ற தகவலை உறுதி செய்துள்ளனர். ஆனால் திருமணம் ரத்து செய்யப்பட்ட காரணம் இதுவரை வெளியாகவில்லை.