முஸ்லீம் மதத்தை சேர்ந்த ஒருவர் இந்து கோயிலுக்கு தானமாக நிலம் வழங்கியுள்ளது பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு காடுகோடி பெலதூர் காலனியியைச் சேர்ந்தவர் எச்.எம்.ஜி.பாஷா (65). இவர் வாடகை லாரி வைத்து நடத்தும் தொழில் அதிபர் ஆவார். இவருக்கு பெங்களூருவில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒசகோட்டே வலகேரபுராவின் அருகில் பழைய மெட்ராஸ் ரோட்டில் 3 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. இதன் பக்கத்தில் ஒரு வீர அனுமார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்வதற்கு பாதை இல்லாததால் பக்தர்கள் சிரமப்பட்டு சென்று வந்துள்ளனர். எனவே அந்த கோவிலை புனரமைக்க பக்தர்களும், கோவில் நிர்வாகத்தினரும் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக பாஷாவிடம் சென்று சில பக்தர்கள் கோயிலுக்கு கொஞ்சம் நிலம் வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்களின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பாஷா, அனுமார் கோவில் பக்கத்தில் உள்ள 1.5 சென்ட் நிலத்தை கோவிலுக்கு தானமாக வழங்க முடிவு செய்து ரூ.1 கோடி மதிப்பிலான அந்த நிலத்தை வீர அனுமார் கோவில் அறக்கட்டளைக்கு தானமாக எழுதி கொடுத்துள்ளார். இதனால் மதத்தை கடந்து அனுமார் கோவிலுக்கு பாஷா நிலம் வழங்கியதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து பாஷா கூறுகையில், “நாம் இந்துக்கள், நாம் முஸ்லிம்கள் என்ற பாகுபாட்டை யாரும் பார்க்காமல், நாம் அனைவரும் மனிதர்கள் என்ற எண்ணத்தில் வாழ வேண்டும். சில அரசியல் தலைவர்கள் தங்களின் நலனுக்காக மக்களிடையே சாதி, இனம் மற்றும் மொழி அடிப்படையில் பிரிவை ஏற்படுத்தி வைத்துள்ளனர். இதனால் தற்போதைய தலைமுறைகள் வகுப்புவாத நடவடிக்கைகளை சிந்தித்து வருகிறது. இது போன்ற எண்ணம் மாற வேண்டும். சிலர் லவ்-ஜிகாத் போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதுபோன்ற செயல்களால் நம்முடைய நாடு எப்படி முன்னேறும்? நாம் ஒற்றுமையாக இருந்தால் தான் நாடு முன்னேறும்.
நாம் நமது நாட்டை அதிகமாக நேசிக்க வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதற்காகவே என்னுடைய நிலத்தை அனுமார் கோவிலுக்கு தானமாக வழங்கி இருக்கிறேன். மேலும் புதுப்பிக்கப்பட்ட கோவிலை பார்க்க ஆர்வமாக உள்ளேன் என தெரிவித்துள்ளார். அனுமார் கோவிலுக்கு முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒருவர் நிலம் வழங்கியதை பாராட்டி, அப்பகுதி மக்கள் பாஷாவுக்கு வாழ்த்து பேனர் வைத்துள்ளனர். மேலும் இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.