இன்று நடைபெற்ற சிவகங்கை ஊராட்சிமன்ற தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது
சிவகங்கை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் நடைபெற்று தற்போது யார் வெற்றி பெற்றார் என்பது தெரியவந்துள்ளது . நான்கு முறை ஒத்திவைக்கப்பட்ட இந்தத் தேர்தல் இன்று நடைபெற்றுள்ளது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. 16 மாவட்ட ஊராட்சி வார்டில் 8 இடங்களில் திமுகவும் 8 இடங்களில் அதிமுகவும் போட்டியிட்டன. 11 மாதங்களாக தலைவர் துணைத் தலைவர் தேர்வு செய்யப்படாததால் மாவட்ட கவுன்சிலர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலை நடத்த வலியுறுத்தி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் திமுக வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி நடைபெற இருந்த தேர்தல் முதல்வர் வருகையினால் பதினோராம் தேதியான இன்று நடைபெறும் என ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை 10 மணியளவில் தேர்தல் நடைபெறும் இடத்திற்கு திமுக, அதிமுக உறுப்பினர்கள் வந்தடைந்தனர். இதில் திமுக சார்பாக செந்தில் குமார் என்பவரும் அதிமுக சார்பாக பொன்மணி பாஸ்கரன் என்பவரும் மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
அதன் பிறகு இருவரது மனுவும் பரிசோதனை முடிந்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. 16 உறுப்பினர்கள் உள்ளடங்கிய மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்ட நிலையில் தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளது. அதனடிப்படையில் அதிமுக அதிக வாக்குகள் பெற்று அக்கட்சி சார்பாக போட்டியிட்ட பொன்மணி பாஸ்கரன் வெற்றிபெற்றதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.