தனது தொகுதி நிகழ்ச்சியில் பங்கேற்ற போது ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திமுக தலைவர் ஸ்டாலின் தனது தொகுதிகளில் ஒன்றான கொளத்தூர் பகுதியில் அடிக்கடி சென்று அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். அதனைப் போலவே இன்று காலை நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு வந்து நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டிருந்த ஸ்டாலினுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. தனது உடல் சோர்வாக இருப்பதை அறிந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறினார். இதனையடுத்து அருகேயிருந்த ‘பார் ஆர்த்தோ’ மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு உடனடியாக அவருக்கு அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டன. ரத்த அழுத்தம் அதிகமானதால் திடீரென மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறினர். தற்போது அவர் நல்ல உடல் நிலைக்கு திரும்பியுள்ளார். அதன் பிறகு மீண்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க புறப்பட்டுச் சென்றார். திடீரென ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அங்கு சற்று பதற்றம் நிலவியது. சிறிது நேரத்தில் ஸ்டாலின் சகஜ நிலைக்கு திரும்பி விட்டார் என்ற தகவல் வந்த பிறகு, அங்கிருந்தவர்கள் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.