ரஷியாவின் அர்க்ஹங்கில்ஸ் நகரை வசித்து வந்தவர் ஒலிஷ்யா சிமினோவா(24). தனியார் துணிக்கடையில் வேலை செய்து வந்த இவர் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். இவர் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். மேலும் இவர் குளியலறையில் செல்போனை பயன்படுத்தும் பழக்கத்தையும் கொண்டுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஒலிஷ்யா வழக்கம்போல குளியல் அறைக்கு தனது ஐபோனை கொண்டு சென்றுள்ளார். அங்கு குளியறை தண்ணீர் தொட்டியில் குளித்துக்கொண்டிருக்கும் போது ஐபோனை தண்ணீர் தொட்டியின் அருகில் உள்ள பிளக் பாயிண்-டில் சார்ஜ் போட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக சார்ஜ் போட்டிருந்த ஐபோன் 8 சார்ஜ் ஒயருடன் ஒலிஷ்யா குளித்துக்கொண்டிருந்த தொட்டிக்குள் விழுந்துள்ளது. இதையடுத்து அவர் குளித்துக்கொண்டிருந்த தண்ணீர் தொட்டி முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால், அவர் மீது மின்சாரம் பாய்ந்து குளித்துக்கொண்டிருந்த தொட்டிக்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து ஒலிஷ்யாவை பார்ப்பதற்காக வந்த அவரது தோழி டரியா குளியலறை தொட்டிக்குள் மூச்சுப்பேச்சு இல்லாமல் கிடந்த ஒலிவியாவை தொட்டு எழுப்ப முயற்சித்துள்ளார்.
அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் உடனடியாக சுதாரித்துக்கொண்ட டரியா, குளியலறை தொட்டி தண்ணீருக்குள் செல்போன் சார்ஜரோடு மூழ்கிக்கிடந்தபோதும் அதில் தொடர்ந்து சார்ஜ் ஏறிக்கொண்டுருந்ததை கண்டு அவர் மேலும் அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக பிளக் பாயிண்டில் இருந்த ஸ்விட்சை அணைத்து ஐபோன் சார்ஜருக்கு மின்சாரம் செல்வதை நிறுத்தியுள்ளார். அதன் பின்னர் டரியா காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குளியலறை தொட்டிக்குள் உயிரிழந்த நிலையில் கிடந்த ஒலிஷ்யா சடலத்தை மீட்டு உடற் கூறைவுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதபரிசோதனையில் குளியலறை தொட்டிக்குள் செல்போன் விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து ஒலிவியா பலியானது உறுதியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து குளியலறையில் சார்ஜ் போட்டுக்கொண்டு செல்போனை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.