காவலர் ஒருவர் வித்தியாசமான முறையில் விடுப்பு கேட்டுள்ள சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் காவலர் ஒருவர் தன்னுடைய மைத்துனரின் திருமணத்திற்கு செல்வதற்காக மேலதிகாரிகளிடம் வித்தியாசமான முறையில் விடுப்பு விண்ணப்பம் ஒன்று கொடுத்துள்ளது பரபரப்பாக நெட்டிசன்களிடையே பேசப்பட்டு வருகிறது. காவலர்கள் தங்களுக்கு தேவையான விடுப்பு கோரி மேலதிகாரியிடம் விண்ணப்பம் அனுப்புவது வாடிக்கை. இந்நிலையில் மத்தியபிரதேச மாநிலம் போபால் நகரைச் சேர்ந்த திலீப் குமார் அக்கிர்வார் என்ற காவலர் டிஜிபி அலுவலகத்தில் விடுப்பு விண்ணப்பம் ஒன்றை வழங்கியுள்ளார்.
அந்த கடிதத்தில் தனது மைத்துனர் திருமணம் நடைபெற இருப்பதால் டிசம்பர் 7 முதல் 11ஆம் தேதி வரை விடுப்பு வேண்டும் என்று எழுதியுள்ளார். அதோடு விட்டுவிடாமல் பின்குறிப்பு என்று எழுதி அதில் எனக்கு இந்த விடுப்பு அளித்திட வேண்டும். இல்லை என்றால் என் மனைவியிடம் நான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எழுதியுள்ளார். இவ்வாறு இந்தியில் எழுதப்பட்டிருந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
இந்த கடிதம் குறித்து கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் உபேந்திர ஜெயின் கூறுகையில், “இப்படி விடுப்பு கடிதம் எழுதியுள்ள அந்த காவலருக்கு நிச்சயம் விடுப்பு கிடைக்காது. இப்படியான காரணம் கூறி ஒரு போலீஸ் விண்ணப்பத்தை வழங்குவது ஏற்றுக்கொள்ளப்படாது. அவருக்கு விடுப்பு வழங்கப்படாது. மாறாக தண்டிக்கப்படுவார். மனைவி மீது உள்ள பயத்தினால் இப்படி பின் குறிப்பு போட்டு கடிதம்எழுதியுள்ளார். அவரை பற்றி விசாரித்ததில் கடந்த 11 மாதங்களில் மட்டும் சுமார் 55 நாட்கள் விடுப்பு எடுத்துள்ளார்” என்று கூறியுள்ளார். இது குறித்து நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை போட்டு கலாய்த்து வருகின்றனர்.