வீட்டில் நாய் அசிங்கம் செய்ததால்,வியாபாரியை கொலை செய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூரில் உள்ள ஒப்பில்லாத அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பெரியசாமி. வியாபாரியான இவர், வீட்டில் நாய் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது வீட்டிற்கு இவரது நாய் அடிக்கடி சென்று அசிங்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், பெரியசாமியின் நாய் நேற்றும் ராஜா வீட்டிற்கு சென்று அசிங்கம் செய்துள்ளது. இதனைக் கண்ட ராஜா நாயை அடித்திருக்கிறார்.
இதைப்பார்த்த பெரியசாமி அதை தடுக்க சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் சண்டை முற்றியது. இதில் கோபம் அடைந்த ராஜா இரும்பு கம்பியால் பெரியசாமியை அடித்துள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் அவரை அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக பெரியசாமி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அரியலூர் காவல்துறையினர் கொலை வழக்கை பதிவு செய்து ராஜா மற்றும் அவரது குடும்பத்தாரை தேடிவருகிறார்கள்.