பட்டதாரி இளைஞர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
கோவை மாவட்டத்தில் உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன்(27). இவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார் . கார்த்திகேயன் கல்லூரியில் படிக்கும் பொழுது சக மாணவி ஒருவரை காதலித்துள்ளார். கடந்த மாதத்திற்கு முன்பு அந்த மாணவி கோவைக்கு சென்று கார்த்திகேயனை சந்தித்து பேசியுள்ளார். மேலும் இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர் . இதனிடையே செல்போனில் பேசும் போது காதல் ஜோடிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் கார்த்திகேயன் கடந்த சில நாட்களாக மனவேதனை அடைந்து காணப்பட்டார். இந்நிலையில் இன்று காலை வெளியே சென்ற அவர் திடீரென சாலையில் வைத்து பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டார் . இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திகேயனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.