Categories
உலக செய்திகள்

ஹிட்லர் வளர்த்த முதலை… மாஸ்கோ விலங்கியல் பூங்காவில்… காட்சிக்கு வைப்பு..!!

இரண்டாம் உலகப் போரின் போது கைப்பற்றப்பட்ட ஹிட்லர் வளர்த்த முதலை பதப்படுத்தப்பட்டு ரஷ்யாவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் தலைமையிலான ஜெர்மன் நாசிப் படையை ரஷியாவின் ஸ்டாலின் தலைமையிலான செம்படைகள் 1945-ம் ஆண்டு தோற்கடித்தன. போரின் போது ஜெர்மன் தலைநகர் பெர்லினில் ஹிட்லர் தனது மனைவியுடன் இருந்தார். பெர்லின் சுற்றிவளைக்கப்பட்டதை உணர்ந்த ஹிட்லர் 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி செம்படைகள் தன்னை நெருங்குவதற்கு முன் தன் கைத்துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரோடு அவர் மனைவி இவா பிரானும் தற்கொலை செய்து கொண்டார்.

சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு பெயர் போன ஹிட்லர் பெர்லினில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவுக்கு சென்று அங்குள்ள விலங்குகள் மற்றும் உயிரினங்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்த பூங்காவுக்கு அமெரிக்காவில் 1936 ஆண்டு பிறந்த முதலை ஒன்று பரிசாக வழங்கப்பட்டிருந்தது. சடோன் என்ற பெயர் சூட்டப்பட்டிருந்த அந்த முதலையையும் ஹிட்லர் அடிக்கடி பார்வையிட்டு வந்தார். இதனால், அந்த முதலை ஹிட்லரின் விருப்பமான உயிரினமாகவும் கருதப்பட்டது.

இதற்கிடையில், 1943 ஆம் ஆண்டு போர் நடந்தபோது அந்த பூங்காவில் இருந்த பல்வேறு உயிரினங்கள் பலியாகின. அந்த பூங்காவில் வளர்க்கப்பட்ட 24-க்கும் அதிகமான முதலைகளும் உயிரிழந்தன. இந்த தாக்குதலில் ஹிட்லர் அடிக்கடி பார்வையிட்ட சடோன் முதலையும் உயிரிழந்து விட்டதாக கருதப்பட்டது. ஆனால், நாசி படைகள் சரணடைந்த பின்னர் 1946 ஆம் ஆண்டு ஜெர்மனியில் பாதுகாப்பு பணியில் இங்கிலாந்து வீரர்கள் சிலர் சடோன் முதலையை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, பிடிபட்ட அந்த முதலை ரஷியாவில் உள்ள மாஸ்கோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள உயிரியல் பூங்காவில் முதலை சடோன் வளர்க்கப்பட்டது. ரஷியாவுக்கு கொண்டுவரப்பட்ட அந்த முதலை ஹிட்லரால் வளர்க்கப்பட்டது என்றும் இதை பார்ப்பதற்காவவே அவர் பூங்காவுக்கு அடிக்கடி வருவதாகவும் மேலும் இது அவரது செல்லப்பிராணி என்றும் மக்களிடையே பரவலாக கருத்துக்கள் வெளியாகின.

இந்த தகவலை உறுதிபடுத்த எந்த ஆதாரங்களும் தற்போதுவரை கிடைக்கவில்லை. ஆனால் சடோன் முதலை ஹிட்லரால் வளர்க்கப்பட்டது என்ற கருத்து தற்போது வரை நிலவி வந்தது.  இந்த முதலை தனது 84 ஆவது வயதில் கடந்த மே மாதம் உயிரிழந்தது. இதையடுத்து அதன் உடல் உறுப்புகள் அகற்றப்பட்டு பதப்படுத்தப்பட்டது. தற்போது இந்த முதலையின் உடல் மாஸ்கோவில் உள்ள விலங்கியல் பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |