லிப்டில் சிக்கி எல்ஐசி ஏஜென்ட் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அழகியபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (66). இவர் எல்ஐசி ஏஜென்ட் சங்க தலைவராக இருந்துள்ளார். இந்நிலையில் இவர் அங்குள்ள எல்ஐசி அலுவலகத்தில் பணம் செலுத்த போவதாக கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவரின் குடும்பத்தினர் எல்ஐசி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர் . அங்கு அவர் ஏற்கனவே பணம் கட்டி விட்டு சென்று விட்டதாக அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர் .
ஆனால் கிருஷ்ணமூர்த்தியின் கார் எல்ஐசி அலுவலகத்தின் அருகில் நின்றுகொண்டிருந்தது . இதனால் அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது லிப்டில் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அங்கு சென்று பார்த்த பொழுது கிருஷ்ணமூர்த்தி லிப்டுக்கு அடியில் சிக்கி ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் . மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்