கல்தூண்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து 3 தொழிலாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்கொத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தன் நிலத்தில் கோழிப்பண்ணை அமைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக ஆந்திர மாநிலம் வீ கோட்டா பகுதியில் தனக்கு தேவையான கல் தூண்களை ஏஜென்ட் ஒருவர் மூலமாக ஆர்டர் செய்துள்ளார். இதன்படி, நேற்று முன்தினம் இரவு சில கல் தூண்களை லாரியில் ஏற்றிக்கொண்டு குப்புசாமி என்ற லாரி ஓட்டுனர் ஆந்திராவில் இருந்து புறப்பட்டு வந்துள்ளார். அவருடன் வந்த 3 தொழிலாளிகள் கல் தூண்களின் மேல் தூங்கிக் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை ஏரிக்கொல்லை என்ற பகுதியில் வளைவான சாலையில் லாரியை திருப்ப முயன்றபோது எதிர்பாராதவிதமாக மரத்தில் மோதிய லாரி அங்கிருந்த பள்ளத்தில் சரிந்து கவிழ்ந்துள்ளது. இதில் கல்தூண்களின் மேல் தூங்கிக்கொண்டிருந்த மூன்று தொழிலாளிகளும் தூண்களின் இடையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்