சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது அடுத்த மாதம் முடிவெடுக்கப்படும் என தேமுதிக பொருளாளர் தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் மற்றும் 67 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் பல விவாதங்கள் நடைபெற்ற நிலையில் பொருளாளர் பிரேமலதா முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
2021 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபடுவாரா? மாட்டாரா? என்பது போன்ற கருத்துக்கள் பரவி வருகின்றது. ஆனால் இது குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். நிச்சயமாக இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த் அவர்கள் பங்கேற்பார்கள் என பிரேமலதா தெரிவித்துள்ளார். அதோடு 2021 சட்டமன்ற தேர்தலில் ஏற்கனவே அதிமுகவுடன் இருந்த கூட்டணி தொடருமா அல்லது புதிய கூட்டணியை உருவாக்க தேமுதிக முயற்சிக்க உள்ளதா என்பது போன்ற விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
மேலும் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. அப்போது தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற அறிவிப்பு வெளியாகும் என பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தற்போது செல்வாக்கான தொகுதிகள் எது என்ற பட்டியலை தயாரிப்பது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் தொடர்ந்து கூட்டம் நடைபெற்று வருகிறது.