நடிகர் விஜய் சேதுபதியின் படப்பிடிப்பில் நடிகை மதுமிதா காட்டிய அர்ப்பணிப்பை படக்குழுவினர் பாராட்டியுள்ளனர்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘அனபெல் சுப்ரமண்யம்’. இயக்குனர் தீபக் சுந்தர் ராஜன் இயக்கும் இந்த படத்தில் டாப்ஸி , ஜாங்கிரி மதுமிதா, ராதிகா ,யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடந்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் தொடங்கியது. இந்தப் படப்பிடிப்பில் ஒரு பகுதியில் வேகமாக சமைக்கும் காட்சியில் பங்கெடுத்துக் கொண்ட மதுமிதாவுக்கு எதிர்பாராத விதமாக கொதித்துக் கொண்டிருந்த எண்ணெய் இடுப்பு பகுதியில் பட்டு காயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்த காட்சியில் நடித்துமுடித்துள்ளார் மதுமிதா.
இதன் பின்னர் படக்குழுவுக்கு இந்த விஷயம் தெரிய வர அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது . ஏற்பட்ட காயத்தை உடனே சொல்லாமல் மறைத்ததற்காக இயக்குனர் மற்றும் படக்குழுவை சேர்ந்தவர்கள் மதுமிதாவை அன்புடன் கடிந்து கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே இதே போல் விரதம் மேற்கொண்டு நாள் முழுக்க சாப்பிடாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்ட மதுமிதா மயங்கி விழுந்துள்ளார். அதன் பின்னரும் தனது காட்சியில் நடித்து முடித்த பின்னரே சாப்பிட சென்றிருக்கிறார். தன்னால் படக்குழுவுக்கு சிறிதளவும் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்கிற மதுமிதாவின் எண்ணத்தை படக்குழுவினர் பாராட்டியுள்ளனர் .