வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளை தேசவிரோதிகள் என பாஜகவினர் தெரிவித்துள்ள கருத்து குறித்து பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு பின்னணியில் சீனா மற்றும் பாகிஸ்தானின் ஆதரவு உள்ளதாக மத்திய இணை அமைச்சர் திரு ராவ் சாகத் தான்வே சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதனை தொடர்ந்து விவசாயிகளின் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவி உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விமர்சித்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் திரு மகேஷ் தபேசே, மத்திய அமைச்சர்களின் கருத்து குறித்து பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று காங்கிரஸ் மூத்த தலைவர் பா .சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடுபவர்கள் அனைவரும் காளிஸ் தாணிகள், மாவோயிஸ்டுகள் என்றால் அவருடன் மத்திய அரசு எதற்காக பேச்சுவார்த்தை நடத்துகிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.