தந்தை கண்முன்னே மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடில் உள்ள மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன்(30). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்தது .திருமணத்திற்கு முன்பாக சரவணனுக்கு அவருடைய தந்தை பல லட்ச ரூபாய் முதலீடு செய்து நகை கடை ஒன்று வைத்து கொடுத்துள்ளார். இந்நிலையில் சரவணன் தொழிலை விரிவுபடுத்துவதற்காக தனது தந்தையிடம் அடிக்கடி பணம் கேட்டு வந்துள்ளார். அதற்கு அவருடைய தந்தை இருக்கும் தொழிலை கவனிக்குமாறும் பணம் வந்ததும் தருகிறேன் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சரவணன் மீண்டும் பணம் கொடுக்குமாறு தனது தந்தையிடம் கேட்டுள்ளார். ஆனால் அவரது தந்தை பணம் கொடுக்கவில்லை . இதனால் மனம் உடைந்த சரவணன் அவரது தந்தை கண்முன்னே விஷத்தை அருந்தினார். இதை பார்த்த அவருடைய தந்தை மற்றும் அருகில் உள்ளவர்கள் சரவணனை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் .
அங்கு மருத்துவர்கள் சரவணனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்