சாலை, திறந்தவெளிப் பகுதி, குடிநீர், கழிவு நீர் உள்பட அடிப்படை வசதிக்கு பிறகே மனைகளுக்கு திட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அதிரடியாக அரசாணை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு வீட்டு வசதித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது: –
தமிழக அரசின் அந்த அரசாணையில். தமிழக அரசு கடந்த 2019-ம் ஆண்டு தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளைவெளியிட்டது. இதில், மனை பிரிவுகள், உட்பிரிவுகள் இவற்றுக்கான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதில், மனை பிரிவுகளில் சாலைக்காக ஒதுக்கப்பட்ட இடம் தவிர, 10 சதவீதம் இடம் பொழுதுபோக்கும் இடத்துக்காக ஒதுக்கப்பட்டு அந்த இடத்தை உள்ளாட்சி அமைப்புக்கு இலவசமாக வழங்க வேண்டும். இதுதவிர கூடுதலாக மொத்த பரப்பில் ஒரு சதவீத பகுதி பொது பயன்பாட்டுக்காகவும், 0.5 சதவீத பகுதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கும் வழங்க வேண்டும்.
இந்நிலையில், மனை பிரிவுக்கான அனுமதி பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்று கிரெடய் அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதுதவிர, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலரும் இதுதொடர்பாக உரிய அறிவுறுத்தல்களை வழங்க அரசுக்கு பரிந்துரைத்தார். நகர ஊரமைப்புத் துறை (டிடிசிபி) இயக்குநரும் அரசுக்கு சில பரிந் துரைகளை அளித்தார். இவற்றை பரிசீலித்த தமிழக அரசு, மனை பிரிவுகள் அங்கீகாரம் வழங்குவதை எளிமைப்படுத்த சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள்படி அனுமதி கோரும் மனைபிரிவை, சிஎம்டிஏ அல்லது டிடிசிபி அதிகாரிகள் பார்வையிட்டு, சாலை, திறந்தவெளிப் பகுதி, பொதுமக்கள் உபயோகத்துக்கான இடங்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சிக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
திட்ட அனுமதி, மனை பிரிவு வரைபடம் ஆகியவற்றுடன் தானம் வழங்கப்பட்டதற்கான அசல் ஆவணம் ஆகியவை உள்ளாட்சி அமைப்புக்கு வழங்கப்பட வேண்டும். சென்னை பெருநகர மாநகராட்சி பகுதியாக இருந்தால், திட்ட அனுமதி, மனை பிரிவு அனுமதி மற்றும் அசல் ஆவணம் ஆகியவற்றுக்கு கவுன்சிலின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். அதன்பின் தானமாக வழங்கப்பட்ட இடங்களைக் கையகப்படுத்த வேண்டும். இதர உள்ளாட்சி அமைப்புகளிலும் சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் ஒப்புதல் பெறப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.