தமிழகத்தில் ஐஐடி மாணவர்களை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் கல்லூரிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனையடுத்து கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவர்களுக்கான வகுப்புகள் மட்டும் நடந்து வந்தன. அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் என 104 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது, விடுதியில் உள்ள மாணவர்களுக்கு ஊழியர்கள் சென்று உணவு வழங்குகின்றனர்.
ஐஐடி மாணவர்களை தொடர்ந்து தற்போது அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொரோனா ஏற்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. கல்லூரி திறக்கப்பட்டு ஒரு வாரமே ஆன நிலையில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் பெற்றோர்கள் பேராசிரியர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். இதனால் கல்லூரி திறப்பை தற்காலிகமாக நிறுத்திவைக்க எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.