11 வயது மாணவி ஒருவர் விவசாயிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் பெருமையடைய செய்துள்ளது.
டெல்லியில் போராடும் ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மாணவி குர்சிம்ரத் கவுர்(11) என்பவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இவர் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியான இவர் போராட்டங்களுக்கு மத்தியிலும், தேர்வுக்காக படித்து வருகிறார். ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் இந்த மாணவியும் பஞ்சாபிலிருந்து டெல்லி வரை நடந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்து இந்த சிறுமி கூறுகையில்,” நாங்கள் எங்கள் உரிமைக்காகப் போராடுகிறோம்.
நான் ஆறாம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு படிப்பு முக்கியம் தான். அதேவேளையில் இந்த போராட்டம் மிக முக்கியம். இந்த புதிய சட்டங்களை தடை செய்த பிறகுதான் நான் வீடு திரும்புவேன்” என்று கூறியுள்ளார் இந்த இளம் போராளி. பல வாரங்களாக புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு கடும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கும், அரசாங்கத்திற்கும் இடையே பல சுற்று பேச்சு வார்த்தைகள் நடந்தும் எந்த ஒரு தீர்மானத்திற்கு வழி வகுக்கவில்லை. வேளாண்துறையை தனியாருக்கு விட்டுக்கொடுக்கும் புதிய சட்டங்கள் தடையற்ற சந்தைக்கு பாதிக்கக் கூடியதாக இருக்கும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். ஆனால் சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று அரசாங்கம் கூறுகிறது.