Categories
மாநில செய்திகள்

9 மாவட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. பொங்கல் பரிசோடு நெய் வழங்கப்படும்…!!

9 மாவட்டங்களை சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் 100 கிராம் நெய் பாட்டில்கள் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசின் சார்பாக ஒவ்வொரு வருடமும் பொங்கலை முன்னிட்டு பொங்கல் பை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் மதுரை ஆவின் சார்பாக சுமார் 2,52,000 நெய் பாட்டில்கள் தயாரித்து வழங்கப்பட இருக்கின்றன. இந்த 100 கிராம் நெய் பாட்டில்கள் மதுரை, தேனி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி போன்ற 9 மாவட்டங்களைச் சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளன.

இதன் அடிப்படையில் தயாரிப்புப் பணிகள் நடந்து தற்போது வரை 90,000 பாட்டில்கள் தயாரிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது. மேலும் மீதி ஒரு லட்சத்து 62 ஆயிரம் பாட்டில்கள் தயாரிக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு இரவு பகலாக நடைபெற்று வருவதாக மதுரை ஆவின் நிர்வாகம்கூறியுள்ளது.மேலும் சமீபத்தில் வங்கக்கடலில் உருவான நிவர் மற்றும் புரெவி புயலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்குப் புயல் நிவாரணத்தின் ஒரு பகுதியாக 500 கிராம் பால் வழங்கத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று விடுபட்ட மாவட்டங்களுக்கும் வெவ்வேறு ஆவின் தலைமை தயாரிப்பு மையங்களில் பொங்கல் பரிசு தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் எதிர்வரும் தேர்தலை மனதில் வைத்தே அதிமுக இதுபோல் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறது என அரசியல் விமர்சகர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |