டிசம்பர் 31-ஆம் தேதி கட்சியை அறிவிக்க உள்ளதாக ரஜினி அறிவித்த நிலையில் ரஜினியின் கட்சிக்கு ”மக்கள் சேவை கட்சி” என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் புதிய கட்சியைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகவும், கட்சியின் சின்னமாக பாபா முத்திரை சின்னத்தை கேட்ட நிலையில் ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் கட்சித் தலைவரின் முகவரி ஆணைய பதிவேட்டில் சென்னை எர்ணாவூர் என கூறப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்தாறு மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் வியூகம் சூடு பிடித்துள்ளது. பிரச்சார பணிகளையும் கட்சி சார்ந்த நடவடிக்கைகளையும் அரசியல் கட்சிகள் மேற்கொள்ள தொடங்கிவிட்டன. இதனிடையே நேற்று தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு சட்டமன்ற தேர்தலுக்கான சின்னம் வழங்கியது. அமமுகவிற்கு குக்கர் சின்னமும், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னமும், மக்கள் நீதி மையம் கட்சிக்கு பேட்டரி சின்னமும் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.