17 வயது சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்ய முயற்சித்த தலைமை காவலரின் மகனை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
வட சென்னையை சேர்ந்த 17 வயது சிறுமி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரை காணவில்லை என்று சிறுமியின் அப்பா திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் சிறுமி பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்து பார்த்ததில், ஒரு இளைஞருடன் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது. பின்னர் யார் அந்த இளைஞர் என்று போலீசார் விசாரித்தபோது எம்கேபி நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலரின் மகன் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவரிடம் விசாரிக்கும் போது அவரது மகனும் வீட்டில் இல்லை என்பது தெரியவந்தது. பின்னர் தலைமை காவலரின் மகன் குமரவேலின் செல்போனை ஆய்வு செய்து, அவரது சிக்னலை போலீசார் டிராக் செய்தனர். அப்போது அவர் திருப்பதியில் இருந்ததாக காட்டியது. பின்னர் அங்கு சென்ற சிறுமி, குமரவேலையும் போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் இருவரையும் பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், திருவிக நகர் போலீசார் ஒப்படைத்தனர்.
மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இருவரும் திருமணம் செய்து கொள்வதற்காக திருப்பதிக்கு சென்றதாக கூறி உள்ளனர். மேலும் 17 வயது சிறுமியை திருப்பதிக்கு அழைத்து சென்று திருமணம் செய்ய முயன்ற குற்றத்திற்காக குமரவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுமிக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு பெற்றோருடன் ஒப்படைக்கப்பட்டது. தலைமைக் காவலரின் மகன் போக்சோ சட்டத்தில் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.