நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழில் மோசடி செய்து மாட்டிக்கொண்ட வழக்கில் 3 மாணவிகள் தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 7ஆம் தேதி மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றது. அதில் பரமக்குடியை சேர்ந்த மாணவி தீஷா மற்றும் அவரது தந்தை பாலச்சந்திரனும் கலந்து கொண்டனர். அப்போது தீசா தனது மதிப்பெண் சான்றிதழை அளித்தார்.அதில் அவள் 610 மதிப்பெண் பெற்று இருந்தது தெரியவந்தது. ஆனால் அந்தச் சான்றிதழ் போலியானது என்று தெரியவந்தது.
இதையடுத்து பெரியமேடு போலீசிடம் மருத்துவ அதிகாரிகள் புகார் ஒன்றை அளித்தனர். விசாரணையின் பேரில் திஷா மற்றும் அவரது தந்தையின் மேல் 6 குற்றப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதனையடுத்து விசாரணைக்காக இருவரையும் காவல் நிலையத்திற்கு வரும்படி சம்மன் அனுப்பப்பட்டது. இன்று காலை ஆவணங்களுடன் நேரில் வந்து பார்க்குமாறு குறிப்பிட்டிருந்தது.இதைத் தொடர்ந்து இருவரும் விசாரணைக்காக இன்று காவல் நிலையத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து மேலும் 3 மாணவிகள் நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழில் மோசடி செய்தது தெரியவந்தது. அந்த மூன்று மாணவிகளை பற்றிய தகவல்களை பெரியமேடு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். தீஷா மற்றும் அவரது தந்தை பாலச்சந்திரன் அவரிடம் விசாரணை நடந்தி முடித்த பிறகு அந்த மூன்று மாணவர்களையும் நேரில் வரவழைத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
மாணவி தீஷா போலியான அழைப்பானை வைத்து கலந்தாய்வில் பங்கேற்றதாக விசாரணையின்போது தகவல் தெரியவந்தது. திஷா 10 ஆவணங்களை கலந்தாய்வின் போது அளித்துள்ளார். அனுமதி அட்டை, மதிப்பெண் சான்றிதழ், தர வரிசைப்பட்டியல் உள்ளிட்ட விவரங்களையும் தந்துள்ளார். தீஷா கொடுத்த 10 ஆவணங்களையும் கலந்தாய்வு அதிகாரிகள் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். திஷா கொடுத்த ஆவணங்கள் சரியானவை தானா? அல்லது போலியானவை? என்று பெரியமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திஷா பரமக்குடியில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் மையத்திலிருந்து 610 மதிப்பெண் பெற்ற வேறு ஒரு பெண்ணின் சான்றிதழில் தனது போட்டோவை ஒட்டி போலிச் சான்றிதழை தயாரித்தது தெரியவந்தது.அந்த கம்ப்யூட்டர் மையத்தின் நிர்வாகியிடம் விசாரணை மேற்கொள்வதற்காக காவல்துறையினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அந்த கம்ப்யூட்டர் மையத்தின் நிர்வாகி தலைமறைவாகி விட்டார் என கூறப்படுகிறது.