குடும்ப தகராறில் மனைவியின் கையை கணவன் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த தம்பதியினர் சஞ்சய்காந்தி- சத்தியவதி . இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் சத்தியவதி கணவரிடம் கோபித்து கொண்டு விருத்தாசலத்தில்உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு கூலி வேலை பார்த்து தனது குழந்தைகளை கவனித்து வந்துள்ளார். நேற்று இரவு சஞ்சய் காந்தி மனைவியை பார்ப்பதற்காக விருத்தாசலத்திற்கு வந்துள்ளார் . அங்கு சென்ற அவர் தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு மனைவியை அழைத்துள்ளார்.
அதற்கு சத்தியவதி மறுத்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய்காந்தி மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியின் தலை மற்றும் கைகளை வெட்டியுள்ளார் . இதில் சத்தியவதியின் கை துண்டானதால் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார்.
இதனால் அவரது கணவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் .உயிருக்கு போராடிய சத்தியவதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சஞ்சய் காந்தியை தேடி வருகின்றனர்.