காதல் திருமணம் செய்த 45 நாட்களில் இளம்பெண் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீரணிப்பட்டியை சேர்ந்த இளம்பெண் கற்பகம். இவர் தன்னுடன் கல்லூரியில் படித்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியனை காதலித்து வந்துள்ளார். வெவ்வேறு சமூகங்களை சேர்ந்த இருவரும் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் எனது மகளை காணவில்லை என்று கற்பகத்தின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இதனை விசாரித்த காவல்துறையினர் சென்னை தாம்பரம் அருகில் உள்ள பகுதியில் காதல் ஜோடிகள் வசிக்கிறார்கள் என்றும், இது திருமணத்திற்கான வயது தான் என்பதாலும் தங்களால் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் கூறியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கற்பகம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மகளின் தற்கொலைக்கு அலெக்ஸ்பாண்டின் தான் காரணம் என்று காவல்துறையில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்த விசாரணையில், “கற்பகம் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு அலெக்ஸ்பாண்டியன் நீ தாழ்ந்த சாதி என்பதால் என்னால் வெளியே தலைகாட்ட முடியவில்லை. அதனால் வெளிநாட்டில் உள்ள உன் அண்ணனிடம் 10 லட்சம் கொடுக்குமாறு கேட்க வேண்டுமென்று துன்புறுத்தியுள்ளார். பணம் வாங்கினால் தான் உன்னை என் வீட்டில் மருமகளாக ஏற்றுக் கொள்வார்கள் என்று கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் கற்பகம் தனது பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது, நான் உங்கள் பேச்சைக் கேட்காமல் அலெக்ஸ்பாண்டியன் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி வந்தது தவறு தான் என்று கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். மேலும் என்னை எப்படியாவது அவனுடைய குடும்பத்திடமிருந்து வந்து காப்பாற்றுங்கள் என்று தெரிவித்துள்ளார். அப்போது அலெக்ஸ்பாண்டியன் செல்போனை பிடுங்கி கற்பகத்தை அடித்துள்ளார். இதன்பின்னர் தான் கற்பகம் தற்கொலை செய்துள்ளார்” என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் அலெக்ஸ்பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.