தமிழகத்தில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அப்போதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் உருவான இரண்டு புயல்கள் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவிக் கொண்டு இருப்பதால் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்யும்” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.