கேரள உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கம்யூனிச அரசு பெருவாரியான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
கேரள உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் இடதுசாரிகள் பல இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றது. இன்று நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 6 மாநகராட்சிகளில் 4-ல் இடதுசாரிகளும், 2-ல் காங்கிரஸ் கூட்டணியும் முன்னிலையில் உள்ளன. 86 நகராட்சிகளில் 39 இடதுசாரிகளும், 38 காங்கிரஸ் கூட்டணியும், 2-ல் பாஜகவும் முன்னிலையில் உள்ளன.
14 மாவட்ட ஊராட்சிகளில் 11ல் இடதுசாரிகளும், 3 இல் காங்கிரஸ் கூட்டணியும் முன்னிலையில் உள்ளன. 152 ஊராட்சி ஒன்றியங்களில் 90ல் இடதுசாரிகளும், 57 காங்கிரஸ் கூட்டணியியும், 3ல் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. 942 ஊராட்சிகளில் 367 இடதுசாரிகளும், 321 காங்கிரஸும், 28-ல் பாஜகவும் முன்னிலையில் உள்ளன. கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான கம்யூனிச அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.
குறிப்பாக ஐயப்பன் கோவில் விவகாரத்தில் இந்து அமைப்புகள், பாஜக உள்ளிட்டவை கடுமையாக விமர்சனம் செய்தன, தங்கக்கடத்தல் விவகாரமும் பிரசாரத்தில் எதிரொலித்தது. இந்த நிலையிலும்கூட ஆளும் கம்யூனிச அரசுக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்திருப்பது கம்யூனிச தொண்டர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இன்னும் ஐந்து மாதங்களில் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது.