உலகில் பாஜகவை விட பெரிய திருடர்கள் யாரும் இருக்க முடியாது என்ற மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அதில் பேசிய அவர், “நாங்கள் மேற்குவங்க மக்களுக்காக பணியாற்றி வருகிறோம். அவர்கள் எங்களை எப்போதும் திருடர்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் பாஜகவை விட பெரிய திருடர்கள் யாரும் கிடையாது. அவர்கள் மிகப் பெரிய கொள்ளைக் காரர்கள்.
மேலும் இந்து, முஸ்லிம் மற்றும் சீக்கியர்கள், கிறிஸ்தவர்களிடையே வேறுபாட்டை ஊக்குவிப்பவர்கள். இதுதான் அவர்கள் செய்து வருகிறார்கள். கடந்த ஆறு வருடங்களாக டெல்லியில் ஆட்சி யில் உள்ளனர். 2016, 2014 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தேனி தோட்டங்கள் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால் நிறைவேற்றவில்லை.
அதுமட்டுமின்றி ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். குறைந்தது இரண்டு லட்சம் வேலைகள் ஆவது அவர்கள் கொடுத்தார்களா?. கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் அனைவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என வாக்குறுதி அளித்தனர். அதையும் நிறைவேற்றவில்லை. அவர்கள் பொய் வாக்குறுதிகளை மட்டுமே அளிப்பார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.