ஸ்கூட்டரில் சென்ற கல்லூரி மாணவிகளை லாரி மோதியதில் ஒரு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
பத்மநாபபுரம் தக்கலை அருகே மேக்காமண்டபம் பருவக்காட்டுவிளை பகுதியில் தங்கராஜ் மற்றும் அவருடைய 22 வயது மகள் ரூபிஷாவும் வசித்து வருகின்றனர். ரூபிஷா நாகர்கோவிலில் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். நேற்று ரூபிஷா தனது உறவினரான சுபலா எனும் பெண்ணுடன் ஸ்கூட்டரில் அழகிய மண்டபத்தில் இருந்து திருவனந்தபுரம்- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். ஸ்கூட்டியை சுபலா ஓட்ட ரூபிஷா பின்னால் அமர்ந்து சென்றுள்ளார் . தக்கலை காவல் நிலையம் அருகே உள்ள நடுநிலைப் பள்ளிக்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராது பின்னால் வந்த லாரி அவர்களது ஸ்கூட்டரின் மேல் மோதியது. அவர்கள் இருவரும் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்டு மிகவும் படுகாயங்களுடன் கீழே விழுந்தனர்.
இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் பதறி அடித்துக் கொண்டு அவர்களை தூக்கி தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் அங்குசிகிச்சை பலன் இல்லாததால் அவர்கள் மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கவலைக்கிடமாக சிகிச்சை பலனின்றி ரூபிஷா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சுபலா போலீசிடம் புகார் ஒன்றை அளித்தார்.
அப்புகாரின் பேரில் போலீசார் ரூபிஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் லாரியை கைப்பற்றி , அதன் ஓட்டுனரான திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தம் (37) என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.