ஒரு மாதத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற இருப்பதால் மதுரையில் அதற்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீரத்திற்கு சான்றான விளையாட்டுகளில் ஒன்றாகும் . மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு போன்ற இடங்கள் ஜல்லிக்கட்டிற்கு தனிச்சிறப்பு வாய்ந்தவை . அதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் வாய்ந்தது . வீர விளையாட்டில் காளைகளை களத்தில் இறக்குவதை உரிமையாளர்களும் அந்த காளைகளை களத்தில் அடக்குவதை வீரர்களும் பெருமிதமாக கருதுகின்றனர்.
ஜல்லிக்கட்டு நடைபெற இன்னும் ஒரு மாத காலமே இருப்பதால் மொத்த மதுரை மாவட்டமும் இதற்காக தயாராகி வருகின்றது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு எந்த பாதிப்பு இருக்காது என்ற நம்பிக்கை மதுரை மக்களிடையே மலர்ந்துள்ளது. இந்நிலையில் காளைகளுக்கு உரிமையாளர்கள் மண் குத்துதல்,நீச்சல் போன்ற தீவிர பயிற்சிகளை அளித்து வருகின்றனர். மேலும் தற்காலிக வாடிவாசல்களை அமைத்தும் பயிற்றுவித்து வருகின்றனர். களத்தில் நின்று விளையாடும் காளைகளுக்கு அதிக வரவேற்பு இருக்கும் என்பதால் அதற்கான பயிற்சியை காளையின் உரிமையாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதோடு மாடுபிடி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் .
மதுரையின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி அங்குள்ள அவனியாபுரம் பகுதியில் நடைபெறும். தொடர்ந்து மற்ற இடங்களில் போட்டிகள் நடத்தப்படும். போட்டிக்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இருப்பினும் அலங்காநல்லூர் விழாக்குழுவினர் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி தாசில்தாரிடம் மனு அளித்துள்ளனர் .கடந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு விழாவை அமெரிக்கா, பிரிட்டன், மலேசியா போன்ற நாடுகளை சேர்ந்தோர் நேரில் கண்டு களித்தனர். ஆனால் இந்த முறை வெளிநாட்டினர் வருகை மிகுதியாக இருக்காது என கூறுகின்றனர்.களத்தில் நின்று ஆடும் காளைகளை பார்க்க மொத்த மதுரையும் காத்திருக்கின்றது.