அண்ணன்-தம்பி இருவரும் சேர்ந்து விவசாயியை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
நெல்லை மாவட்டத்திலுள்ள மானூர் பகுதியை சேர்ந்தவர் தவிடன் . இவர் விவசாயம் செய்து வந்தார் . மேலும் தனது வீட்டை ஒட்டிய படி சிறிய கடை ஒன்றையும் நடத்தி வந்துள்ளார் . அதே ஊரைச் சேர்ந்தவர்கள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன். சுப்பையா தவிடனிடம் வந்து தனது வயலில் உள்ள நெற்பயிர்களை கிருஷ்ணனின் மாடுகள் சேதப்படுத்தியதாக கூறியுள்ளார். இதனை கேட்ட தவிடன் தனது தோட்டத்தில் உள்ள வாழைகளையும் கிருஷ்ணனின் மாடுகள் சேதப்படுத்தியதாக கூறியுள்ளார்.
இதையடுத்து அங்கு வந்த கிருஷ்ணனின் 17 வயது மகன் “எங்களைப் பற்றி மற்றவர்களிடம் நீ எப்படி குறை கூறலாம்” என்று கூறி தவிடனை தாக்கியுள்ளான் . இதனை அறிந்த தவிடனின் சகோதரர் ராமகிருஷ்ணனும் அவரது மனைவியும் வந்து சண்டையை விலக்கி விட்டனர். இதையடுத்து அங்கிருந்து வீட்டிற்கு சென்ற கிருஷ்ணனின் மகன் தனது அண்ணனை அழைத்துக்கொண்டு மீண்டும் தவிடனின் கடைக்கு வந்துள்ளான்.
அப்போது அவர்கள் இருவரும் கடையில் இருந்த தவிடனை வெளியே இழுத்து வந்து அடித்து உதைத்துள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த தவிடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தவிடனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .மேலும் வழக்குப்பதிவு செய்து கொலை செய்த 17 வயது சிறுவனையும் அவனது சகோதரனையும் காவல்துறையினர் கைது செய்தனர் .