கடனை திருப்பி செலுத்த முடியாததால் பழக்கடைக்காரர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
திருநெல்வேலி அருகே உள்ள பேட்டையை சேர்ந்த தம்பதியினர் முத்துகிருஷ்ணன்- செல்வி. இவர்ககுக்கு ரூபிணி, லாவண்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. முத்துகிருஷ்ணன் பேட்டை ரொட்டிக்கடை பேருந்து நிலையம் அருகே பழக்கடை மற்றும் ஜூஸ் கடை நடத்தி வந்தார்.இவரது மனைவி செல்வி அங்குள்ள பிளாஸ்டிக் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். முத்துகிருஷ்ணன் கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கின் போது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் தவித்துள்ளார் .
இந்நிலையில் வழக்கம்போல் நேற்று காலை கடைக்கு வந்த முத்துகிருஷ்ணன் ஷட்டரை திறந்து உள்ளே சென்றார் .பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு ஷட்டரை பாதி அளவு திறந்து வைத்துள்ளார் . நீண்ட நேரம் ஆன பின்பும் ஷட்டர் பாதி அளவு திறந்திருந்ததால் சந்தேகமடைந்த பக்கத்து கடைக்காரர்கள் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.அப்போது கடையின் உத்திரத்தில் முத்துகிருஷ்ணன் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார் . இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .
தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்துகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . அப்போது தற்கொலைக்கு முன்பாக அவர் சட்டைப்பையில் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில் கொரோனா பாதிப்பால் வியாபாரம் சரியாக செல்லவில்லை .இதனால் வாங்கிய கடனை என்னால் திரும்ப செலுத்த முடியவில்லை . என்னுடைய சாவுக்கு வேறு எதுவும் காரணம் கிடையாது இப்படிக்கு முத்துகிருஷ்ணன் என்று எழுதியிருந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.