கைலாசாவுக்கு மூன்று நாட்கள் இலவச விசா, உணவு, தங்குமிட வசதிகளோடு அனுமதிக்கப்படும் என்றும் அதற்கு இப்போதிருந்தே மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கத் தொடங்கலாம் என்றும் நித்தியானந்தா அதிரடி அறிவிப்பு செய்துள்ளார்.
இது குறித்து நித்யானந்தா இன்று (டிசம்பர் 16) பேசி வெளியிட்டுள்ள வீடியோவில், “கைலாசாவுக்கு வருகை தர விரும்புவர்கள் இன்று முதல் கைலாசாவின் [email protected] என்ற மின்னஞ்சலில் விண்ணப்பம் செய்யலாம். மூன்று நாள் விசா எந்தவித கட்டணமும் இன்றி இலவசமாக வழங்கப்படும். அதேபோன்று மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பும்வரை உணவு தங்குமிட வசதிகளும், போக்குவரத்து வசதிகளும் கைலாசா நிர்வாகத்தின் சார்பாக செய்து தரப்படும்.
வருகை தரக்கூடிய நபர்கள் தங்களின் முழு விவரங்களோடு கைலாசாவின் மின்னஞ்சலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் ஆஸ்திரேலியாவில் இருந்து மட்டுமே இந்த சேவை என்பதால் வருகின்ற நபர்கள் ஆஸ்திரேலியா வரை தங்களது சொந்த செலவில் வருகை தர வேண்டும். ஆஸ்திரேலியாவிலிருந்து கருடா என பெயரிடப்பட்டுள்ள கைலாசாவின் சிறிய விமானங்கள் மூலமாக கைலாசாவுக்கு எந்தவிதக் கட்டணமும் இன்றி அழைத்து வரப்படுவர்.
விண்ணப்பிக்கின்ற நபர்கள் அனைவருக்கும் மூன்று நாட்களுக்கு மேல் கையிலாசாவில் தங்க அனுமதி இல்லை. மேலும், சிவனை வழிபடுகின்ற ஆன்மிக நோக்கத்தோடு மட்டுமே வருகை தரவேண்டும். ஒருநாள் நேரடி தரிசனத்திற்கும் அனுமதி” என பேசியுள்ளார்.