அம்மா உணவகம் போல் அம்மா காய்கறி மளிகை கடையை ஏற்படுத்தி, கிராமப்புற பெண்களுக்கு நிதி உதவி செய்யுமாறு கரூரில் முதலமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் 781 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தும், அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினர். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனோ நோய் தொற்று குறித்து மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை முதலமைச்சர், மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர் விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
மேலும் கரூர் மாவட்டத்தில் உள்ள ஏழு விவசாய சங்கங்களுடன் அவர் உரையாடினார். அப்போது விவசாயிகள் முருங்கைக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும், செங்காந்தள் மலர்களை ஏற்றுமதி செய்ய விவசாயிகளுக்கு அரசு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இதையடுத்து, தொழில் முனைவோர்கள் தங்களது கோரிக்கைகளை முதலமைச்சரிடம் எடுத்துக் கூறினார்கள்.