வாட்ஸ் அப் செயலி மூலம் பணம் அனுப்பும் வாட்ஸ் அப் பேமெண்ட் வசதி இந்தியாவில் இன்று செயல்பாட்டுக்கு வந்தது.
.ஃபேஸ்புக் நிறுவனத்தால் நடத்தப்படும் வாட்ஸ் அப் செயலி, கடந்த 2018ஆம் ஆண்டு, யூபிஐ மூலம் பணம் அனுப்பும் வசதியை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த வசதியைப் பயன்படுத்தி பயன்பாட்டாளர்கள் பணத்தை ஒருவருக்கு அனுப்பவும், பெறவும் முடியும். ஆனால், இதற்கான பரிசோதனை குறிப்பிட்ட சில லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் பணம் அனுப்பும் சேவையை வழங்க என்பிசிஐ கடந்த மாதம் அனுமதி வழங்கியது. இதன் மூலம் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் விற்று, பணத்தை வாட்ஸ் அப் மூலம் பெறலாம். ஒருவர் மற்றொருவருக்குப் பணத்தையும் அனுப்ப முடியும். வாட்ஸ் அப்பில் பணம் அனுப்பும் வசதி படிப்படியாக அமல்படுத்தப்படும்.*
ஸ்டேட் வங்கி, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் ஆகிய வங்கிகளின் ஆதரவுடன் இந்த பேமெண்ட் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் இந்தியாவின் தலைவர் அபிஹிஜித் போஸ் விடுத்த அறிவிப்பில் கூறுகையில், ‘ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி, ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து எளிமையாக, பாதுகாப்பான முறையில் இந்தியா முழுவதும் பணம் அனுப்பும் வசதியை அறிமுகம் செய்வது மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது.*
யுபிஐ முறை என்பது பரிமாற்றுச் சேவை. டிஜிட்டல் பொருளாதாரத்தின் நலன்களையும், நிதிச் சேவைக்குள் இதற்கு முன் வாய்ப்பு கிடைக்காத பலரையும் கொண்டுவர எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ள வாட்ஸ் அப் பேமெண்ட் மூலம் ஒருவருக்கு புகைப்படம், வீடியோ, ஆடியோ அனுப்புவதைப் போல் எளிமையாக அனுப்ப முடியும். அதற்கு முன்னதாக, செட்டிங்ஸில் சென்று பேமெண்ட் பகுதியில், நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கணக்கை இணைத்துவிட வேண்டும்.
அதன்பின் வங்கிக்கணக்கில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வந்து அதை உறுதி செய்யும். அதன்பின் யுபிஐ மூலம் எளிதாகப் பணப் பரிமாற்றம் செய்யலாம். இந்தியாவைப் பொறுத்தவரை பேடிஎம், கூகுள் பே, வால்மார்ட் நிறுவனத்தின் ஃபோன்பே, அமேசான் பே ஆகியவை ஏற்கெனவே வலிமையாக இருக்கும் நிலையில், அவர்களோடு வாட்ஸ் அப் நிறுவனமும் போட்டியிடும். ஏறக்குறைய 40 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பேமெண்ட் சர்வீஸ் ஆப்ஸ்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.