பாக்கெட்டில் அடைக்கப்பட்டு பளபளவென்று இருக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ் பார்த்தால் யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு சிப்ஸ் ஆலையில் நடத்தப்பட்ட சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள உணவுப் பொருள் தயாரிப்பு ஆலையில் உருளைக்கிழங்கு சிப்ஸ், சேவு உள்ளிட்ட நொறுக்குத் தீனிகள் தயாரித்து வருகின்றனர். அந்த ஆலையில் சோதனை செய்ய உணவு மற்றும் மருத்துவ கழக அதிகாரிகள் சென்றபோது ஆலையை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு கதவை திறக்காமல் ஊழியர்கள் முரண்டுபிடித்துள்ளனர். பின்னர் காவல் அதிகாரி ஒருவர் ஏறி குதித்து உள்ளே சென்று பூட்டை உடைத்து மற்ற அதிகாரிகளுடன் உள்ளே நுழைந்தனர். இதனைக் கண்டு ஆலையின் உரிமையாளர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அவரது மகனும், மனைவி மட்டுமே அங்கே இருந்தனர். இதனைத்தொடர்ந்து ஆலையை ஆய்வு செய்தபோது புற்றுநோய் உருவாக வாய்ப்புள்ள சோடியம் ஹைட்ராக்சைடு ரசாயனம் 100 கிலோ அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டது. பளபளப்பாக தெரிய உருளைக்கிழங்கை அந்த ரசாயனத்தில் கழுவி சிப்ஸ் தயாரித்துள்ளனர். அதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் 700 குவின்டால் உருளைக்கிழங்கு அழுகிய நிலையில் இருந்துள்ளது.
உருளைக்கிழங்கு சுத்தம் செய்ய வைத்திருந்த 180 லிட்டர் பாமாயிலும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆலையை பற்றி விசாரித்ததில் ஆலையின் உரிமையாளர் ஏற்கனவே இந்தூரில் மற்றொரு இடத்தில் உணவுப்பொருள் தயாரிப்பு ஆலையை நடத்தி வந்ததாகவும், அந்த ஆலையில் உணவு பாதுகாப்பு விதி மீறலை குறித்து நடைபெற்ற வழக்கில் தண்டனையாக 95 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது தெரியவந்தது.
மேலும் அந்த அபராதத் தொகையை செலுத்தாமல் அதனை கைவிட்டு, புதிதாக இந்த ஆலையை தொடங்கி நடத்தி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. மேலும் ஆலையை இழுத்து மூடிய அதிகாரிகள், உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
Madhya Pradesh: Officers of Food & Drugs Administration conducted a raid on a potato chips production unit in Indore yesterday. Additional Collector Abhay Bedekar said, "We found that rotten potatoes were being used. Strict Action will be taken in this matter". pic.twitter.com/WH01gdxuwW
— ANI (@ANI) December 14, 2020