கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்ட வாலிபர்களை கண்டித்த ஒப்பந்த ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்டார் .
சென்னையில் உள்ள எண்ணுரை சேர்ந்தவர் 45 வயதுடைய கவியரசன். இவர் தனியார் டயர் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த 13ஆம் தேதி கவியரசன் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது அவ்வழியே கஞ்சா போதையில் வந்த 3 வாலிபர்கள் கூச்சலிட்டபடி ஆபாசமாக பேசி சென்றுள்ளனர். இதனால் கவியரசன் அவர்களிடம் சென்று பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இவ்வாறு பேசுவது தவறு என கூறி அவர்களை கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் அவரை தாக்கியுள்ளனர். மேலும் கீழே கிடந்த கல்லை எடுத்து அவரின் மார்பு மற்றும் மூக்கு பகுதியில் பலமாக தாக்கியுள்ளனர் .இதில் படுகாயமடைந்த கவியரசன் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை தாக்கிய வாலிபர்கள் மூவரும் தப்பி ஓடிவிட்டனர் . மயக்க நிலையில் இருந்த கவியரசனை அவருடைய உறவினர்கள் மீட்டு ஸ்டான்லி மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சண்டையை விலக்க முயன்ற கவியரசனின் 16 வயது மகன் சஞ்சய் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பெற்றுவந்த கவியரசன் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.