டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு சலூன் கடைக்காரர் ஒருவர் இலவசமாக சேவை செய்யும் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பல்வேறு கட்ட போராட்டங்களை விவசாயிகள் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு தரப்பினர் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு சலூன் கடைக்காரர் ஒருவர் இலவசமாக முடி திருத்தம் மற்றும் ஷேவிங் செய்து வருகிறார். இதுபற்றி அவர் கூறுகையில், “குருஷெத்ராவில் உள்ள எனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் 90% பேர் விவசாயிகள், அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவே டெல்லிக்கு வந்தேன். போராட்டம் முடியும் வரை இங்கே இருந்து அவர்களுக்கு இலவசமாக சேவை செய்வேன்” என்று அவர் கூறியுள்ளார். சலூன் கடைக்காரர் இந்த சேவை மனப்பான்மை அனைவரிடத்திலும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.