லஞ்ச ஒழிப்பு துறையின் காவல் ஆய்வாளர் மனைவியை கொன்று விட்டு தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
தேனி மாவட்டத்திலுள்ள வடுகபட்டி சேர்ந்தவர் பெருமாள்பாண்டி. இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2010ஆம் ஆண்டு லஞ்ச வழக்கிலிருந்து அரசு மருத்துவரை விடுவிப்பதற்காக பெருமாள் பாண்டி லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது . இதனால் லஞ்ச ஒழிப்பு துறையினர்இவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது.
நேற்று முன்தினம் வழங்கப்பட்ட தீர்ப்பில் நீதிபதி பெருமாள்பாண்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். இதனை தொடர்ந்து ஜாமீனில் பெருமாள் பாண்டி வெளியே வந்திருந்தார். இந்நிலையில்அவர் மதுரை தத்தனேரி பகுதியில் உள்ள வீட்டில் தன் மனைவி உமா மீனாட்சியுடன் தங்கி இருந்தார். இந்நிலையில் பெருமாள் பாண்டிக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பெருமாள் பாண்டி அவரது மனைவியை சுத்தியலால் தாக்கியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவரது மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.