கொரோனா பரவல் காரணமாக பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டும். குறிப்பாக எம்ஜி ரோடு, பிரிக்கேட் சாலைகளில் விடிய விடிய பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். கடந்த 2017ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சிலர், பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
தற்போது கொரோனா பரவல் காரணமாக கர்நாடக மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது என பெங்களூரு மாநகர காவல்துறை ஆணையர் கமல் பந்த் தெரிவித்துள்ளார். மேலும் ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவை அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், வீதி விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.