Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பறிபோன கால்கள்…. மருத்துவர்களின் விடாமுயற்சி…. மறுவாழ்வு பெற்ற இளைஞர்…!!

கால்களை இழந்த இளைஞருக்கு மருத்துவர்கள் செயற்கை கால் பொருத்தி மறுவாழ்வு அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சித்தாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் 19 வயதுடைய பிரதாப் .இவர் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம்  மழை பெய்யும் பொழுது வெளியே சென்றுள்ளார். அப்போது அவர் வைத்திருந்த குடையின் மேற்புற கம்பி தவறுதலாக மின்சார கம்பி மீது பட்டுள்ளது. அதில் ஏற்பட்ட மின்சார தீ விபத்தின் காரணமாக பிரதாப் கடுமையாக பாதிக்கப்பட்டார்.இதனால் அவருக்கு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவம் அளிக்கப்பட்டு வந்தது.

இந்த தீ விபத்தில் பாதிப்படைந்த பிரதாப்பை  காப்பாற்ற அவரது  இரண்டு கால்களையும் முட்டிக்கு கீழ் நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.கால்கள் நீக்கப்பட்ட நிலையில் பிரதாப் வாழ்நாள் முழுவதும் சக்கர நாற்காலியை சார்ந்தே இருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது . இந்நிலையில் பிரதாப்பிற்கு  நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அவரை  கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உள்ள  உடலியல் மற்றும் மறுவாழ்வு துறைக்கு செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர் . அதனை தொடர்ந்து அங்கு சென்ற பிரதாப்பிற்கு பிஸியோதெரபி மருத்துவர்கள் தீவிர  பயிற்சி அளித்தனர்.

மருத்துவர்களின் விடாமுயற்சியால் பிரதாப் நடப்பதற்கு  தேவையான செயற்கை கால்கள் தயாரிக்கப்பட்டன. நவீன செயற்கை கால் தயாரிக்கப்பட்டு நடப்பதற்கு தேவையான  பயிற்சிகள்  அளிக்கப்பட்டது. இரண்டு கால்களை இழந்த நபர் செயற்கை கால் பொருத்திய பின்பு உடல் எடையை சமப்படுத்தி நடப்பது மிகவும் சிரமமான ஒன்றாகும். இருந்தபோதிலும் மருத்துவர்கள் அளித்த தீவிர  பயிற்சியின் மூலம் செயற்கைகால்கள் மூலம் பிரதாப் தனியாக நடக்கிறார்.

இதுமட்டுமின்றி செயற்கை கால் பொருத்தும் சிகிச்சையின் போது பிரதாப்பிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து மீண்ட அவர் யாருடைய துணையும்   இல்லாமல் தனது பணிகள் அனைத்தையும் தாமாகவே செய்து வருகிறார்.மேலும்  சைக்கிள் ஓட்டுவது ,மாடிப்படி ஏறுவது என அனைத்து இயல்பான பணிகளையும் மற்றவர்களின் உதவியின்றி  தானே செய்கிறார்.

Categories

Tech |