சபரிமலையில் வருகின்ற 20ஆம் தேதி முதல் தினமும் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ளது. அதன் பிறகு பக்தர்கள் அனைவரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் கொரோன அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி வாரத்தின் ஐந்து நாட்களில் ஆயிரம் பக்தர்களும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 2000 பக்தர்களும், மகரவிளக்கு பூஜை போது 5 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அதற்கு டிக்கெட் முன்பதிவு கட்டாயம். அதன்பிறகு நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. அதனால் தினமும் கூடுதலாக 1000 பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் பக்தர் களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. இதுபற்றி கேரள உயர்நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனையடுத்து சபரிமலையில் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதி கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி வருகிற 20-ஆம் தேதி முதல் தினந்தோறும் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.