தேவைப்பட்டால் நவல்னியை கொன்றிருப்போம் என்று ரஷ்ய அதிபர் புதின் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் அலெக்சி நவல்னி. இவர் அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர் ஆவார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்யாவின் வம்சக் நகரில் விமானம் மூலம் பயணித்தார். அப்போது விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானம் தரையிறக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்பட்டது.
மேலும் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் நவல்னிக்கு கூடுதல் சிகிச்சை அளிப்பதற்காக அரசின் அனுமதியுடன் ஜெர்மனி நாட்டிற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு உள்ளார். இதையடுத்து ஜெர்மனி மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சையால் அவர் கோமா நிலையில் இருந்து சுயநினைவிற்கு திரும்பியுள்ளார். பின்னர் மருத்துவமனையில் இருந்து நவல்னி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
ஆனாலும் உடனே குணமடையும் வரை அவர் தொடர்ந்து ஜெர்மனியில் தங்கி சிகிச்சை பெற்று வந்து கொண்டிருக்கிறார். இதையடுத்து அவர் உடல் நிலை மோசமானதுக்கு காரணம் ரஷ்ய அதிபர் புதின் தான் என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் நேற்று செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது நவல்னியை கொலை செய்யும் நோக்கத்தோடு விஷத்தன்மை உள்ள வேதிப்பொருள் கொடுக்கப்பட்டதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பதிலளித்த புதின், “நவல்னி அமெரிக்க உளவு அமைப்புடன் தொடர்பில் இருக்கிறார். அவரைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதனால் நாங்கள் அவருக்கு விஷம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை எங்களுக்கு தேவை ஏற்பட்டிருந்தால் நாங்கள் அந்த வேலையை சிறப்பாக செய்து முடித்திருப்போம்” என்று புதிய சர்ச்சையை கிளப்பி பேசியுள்ளார்.