பேய் விரட்டுவதாக கூறி இளைஞரை பிரம்பால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மகபூப் பாஷா(29) – ஆயிஷா(19) . கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகபூப் பாஷா வேலைக்கு செல்லாமல் பித்துப் பிடித்ததுபோல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் அவரது மனைவி ஆயிஷா செங்குன்றத்தில் உள்ள சங்கர்(49) என்ற சாமியாரிடம் மகபூப் பாஷாவை அழைத்து சென்றுள்ளார். அந்த சாமியார் மகபூப் பாஷாவிற்கு பேய் பிடித்துள்ளதாகவும் பத்து நாட்கள் இங்கேயே தங்கி பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார் . அதன்படி கணவன் -மனைவி இருவரும் அங்கேயே தங்கியிருந்துள்ளனர் .
இதற்கிடையில் திடீரென மகபூப் பாஷாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அங்குள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் . ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் மர்மசாவு என வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர் . இந்நிலையில் 6 மாதங்களுக்கு பிறகு மகபூப் பாஷாவின் பிரேதபரிசோதனை அறிக்கை வந்தது. அதில் அவரது தலையில் பலமாக தாக்கப்பட்டதால் மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய் பாதிக்கப்பட்டிருந்தது. மேலும் உடலின் பல இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், நரம்புகள் அறுபட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாலேயே அவர் உயிரிழந்தார் எனவும் தெரிய வந்தது.
இதற்கிடையில் சாமியாரிடம் சென்றதிலிருந்து தனது கணவருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது என காவல்துறையினரிடம் ஆயிஷா புகாரளித்தார் . இதையடுத்து காவல் துறையினர் சாமியாரை பிடித்து விசாரித்துள்ளனர் . அப்போது அவர் பேய் விரட்டுவதாக கூறி 10 நாட்கள் தங்கவைத்து தினமும் பிரம்பால் மகபூப் பாஷாவை தாக்கியதாகவும் ஆயிஷவிடமிருந்து 20 ஆயிரத்துக்கு மேல் பணம் வாங்கியதாகவும் கூறினார். காவல்துறையினர் மர்ம சாவு என்ற வழக்கை கொலை வழக்காக மாற்றி பேய் விரட்டுவதாக கூறி இளைஞரை கொலை செய்த சாமியார் சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.